Tuesday, November 18, 2014

சபரிமலைக்கு மாலை அணிந்த முதல் நாளில் சோகம் லஸ் சிக்னலில் வாலிபர் வெட்டி கொலை


சபரிமலைக்கு மாலை அணிந்த முதல் நாளில் சோகம் லஸ் சிக்னலில் வாலிபர் வெட்டி கொலை

சென்னை, : சபரிமலைக்கு மாலை அணிந்த முதல் நாளிலேயே வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். லஸ் சிக்னல் அருகே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற டர் கார்த்திக் (21). போஸ்டர் ஒட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், நண்பர்களுக்கும் இடையே சிறு சிறு தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நண்பர்களுக்குள் மோதலும் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சிலர் கார்த்திக்கை கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளனர். இதை கார்த்திக் கண்டுகொள்ளவில்லை. ஐயப்ப பக்தரான கார்த்திக், சபரிமலை செல்ல முதல்நாளான நேற்று மாலை அணிந்து கொண்டார்.
மாலை 6.30 மணிக்கு தனது வீட்டு அருகே லஸ் சர்ச் சாலை காமதேனு திரையரங்கம் இருந்த இடத்தின் எதிரே உள்ள ஷகி அழகு நிலையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, நோட்டம் விட்ட 5 பேர் கும்பல் கார்த்திக்கை சரமாரியாக அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கார்த்திக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
முதல்கட்டமாக, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கின் நண்பர்களான ஜீவா, மணி, சுருட்டு கார்த்திக், உதயா, சுகுமார் ஆகியோர் கார்த்திக்கை தீர்த்துக்கட்டினார்களா என்ற கோணத் தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கார்த்திக் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த தெரு விளக்கு எரியவில்லை. அது எரிந்திருந்தால் கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.
திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சாம் வின்சென்ட். இவர் உள்பட 16 இன்ஸ்பெக்டர்களை சில தினங்களுக்கு முன்னர் கமிஷனர் ஜார்ஜ் அதிரடியாக இடமாற்றம் செய்தார். அப்போது, சாம் வின்சென்ட்டுக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பணி இடமாறுதல் வழங்கப்பட்டது. அவர் நேற்று மாலை 4 மணிக்குத்தான் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்முதலாக ரோந்து சுற்றி வருகிறேன் என்று கிளம்பியவர் நேராக கொலை வழக்கு விசாரணையைத்தான் தொடங்கி உள்ளார்.

No comments:

Post a Comment